ஒரு மன்னரிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் மன்னனை புகழ்ந்து கொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்த மன்னனிடம் துளிக்கூட அன்போ பாசமோ காட்டாமல் வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று துதி பாடி புகழ்ந்துகொண்டிருக்கிறவன்தான் மன்னனின் பிரதிநிதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும். மன்னன் அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால், அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். ஈசுவரன் அசட்டு மன்னன் இல்லை. தன்னை தினமும் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான். தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பாசம் கொள்வான். ஆனாலும், அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாம், "வெட்டு, வெட்டு' என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது. இது பகவான் செய்த லோகம். சர்வலோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை. எனவே இவர்களெல்லாம் நம்மைச் சார்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள். ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜன சமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழ வேண்டுமென்றே நமக்கு வேத தர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது.
நிறம்