logo
home தத்துவம் பிப்ரவரி 20, 2016
பிறருக்காக நாம் செய்யும் சிறு முயற்சி கூட பெரு நன்மையை விளைவிக்கும் விவேகானந்தரின் அற்புதமான பொன்மொழிகள்
article image

நிறம்

ஒவ்வொருவரையும் இறைவனாகக் கருதுங்கள். ஒருவருக்கும் நம்மால் உதவி செய்ய முடியாது. பணி செய்ய மட்டுமே முடியும். கடவுளின் பிள்ளைகளுக்கு பணி செய்வோம். அந்த பாக்கியத்தை நாம் பெற்றால் நாம் பேறு பெற்றவர்களே. சேவை செய்வதை எண்ணி அளவுக்கு மீறி பெருமை கொள்வது கூடாது. பிறர் பெறாத பெருமையை ஒருவேளை நாம் பெற்றிருந்தால் அது இறையருள் அன்றி வேறில்லை. சேவையை ஒரு வழிபாடாக மட்டுமே செய்யுங்கள். நோயாளி, பாவி, பைத்தியக்காரன், ஏழை என்று எத்தனையோ உருவங்களில் கடவுள் வருகிறார். அவர்களுக்கு பணி செய்து நம் வாழ்க்கையைப் பயனுடையதாக்குவோம். பிறருக்காக நாம் செய்யும் சிறு முயற்சி கூட பெரு நன்மையை விளைவிக்கும். நமக்கும் இருக்கும் சக்தியைத் தூண்டிவிடும். பிறருக்காக செய்த நன்மையால் சிங்கத்தின் வலிமையை நம் மனம் பெற்றிடும். வெற்றியை நாடும் மனிதர்கள் தியானம் செய்வது மிக அவசியம். மூன்று விஷயங்களில் கவனம் இருந்தால் மட்டுமே ஒருவருக்குக் தியானம் எளிதில் கைகூடும். தியானத்திற்கு அடிப்படை உடலிலும், உள்ளத்திலும் தூய்மையாக இருத்தல் வேண்டும். மனத் தூய்மையின் அவசியத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அத்துடன் அதற்கு பொறுமையும் அவசியம். தியானப்பயிற்சியின் தொடக்கத்தில் மனதில் ஆச்சரியமான காட்சிகள் எல்லாம் தோன்றும். நாளடைவில் அவை மறைந்துவிடும். மனம் நம்மைச் சோதிக்கும். பொறுமையோடு இருந்தால் வெற்றி நிச்சயம். எனவே விடாமுயற்சியும் தியானத் திற்கு தேவை. தியானத்தின் முடிவில் "பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளே! உன் மகிமையைத் தியானக்கிறேன். என் உள்ளத்தை ஒளிரச் செய்வாயாக!" என்று பிரார்த்திக்க வேண்டும். உடல் நன்றாக இருந்தாலும், நோயுற்று அவதிப் பட்டாலும் தியானப்பயிற்சியை ஒருநாளும் தவற விடக் கூடாது. காலை மாலை நேரங்களில் உடலும் மனமும் அமைதியாக இருக்கும் என்பதால் இவ்வேளைகளில் தியானப்பயிற்சி எளிதில் கைகூடும். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளே குடி கொண்டு இருக்கின்றன. யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலா தீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன் றைக் கொடுங்கள். நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத் திற்குப் பிறகு சூட்சுமத்தன்மையை அடைகிறது. மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல. எழுந்து தைரியமாக நின்றால், உன் விதியை நீயே நிர்ணயிப்பாய். கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர், அன்பைக் கொள்ளாமல் பொருளை மட்டுமே கொள்ளும் விலைமகள் போன்றவர் ஆவார். அவருடைய நட்பினை ஏற்றுக் கொள்ளாதீர்கள். உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.