logo
home தத்துவம் பிப்ரவரி 03, 2018
கண்ணனுக்கு வாழைப்பழ தோலை கொடுத்த பக்தை.
article image

நிறம்

குருவாயூரில் ஒரு கிராமம்! அங்கு ஒரு கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். எப்பொழுதும் வேலை முடித்ததும் கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கமாகக் கொண்டிருந்தனர். கிருஷ்ணர் மீது பக்திப் பாடல்கள் பாடி அவனை பூஜிப்பார்கள். ஒருநாள் இரவு கணவன் வெளியே சென்றிருந்த சமயம் அது. கிருஷ்ணர் குழந்தை வடிவில் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். மனைவிக்கு அதிர்ச்சி கலந்து ஆச்சரியம்! கண்களில் ஆனந்தக் கண்ணீர்! உடனே பால கிருஷ்ணனுக்கு ஒரு ஆசனமளித்து அமர வைத்தாள் அவள்! தட்டில் சில பழங்களைக் கொண்டு வந்தாள்! பக்தி மிகுதியால் வாழைப்பழத்தை உரித்து, பழத்தைத் தட்டில் வைத்து விட்டு பழத்தின் தோலைக் கண்ணனுக்கு அளித்தாள்! கண்ணன் அவளது பக்தியில் மனம் கரைந்து இருந்தான். அவனும் தோலை வாங்கி வாய்க்குள் போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் சென்றதும் கணவன் வீட்டிற்குள் நுழைந்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது! மனைவியைக் கடிந்து கொண்டான். அவளும் சுய நினைவுக்கு வந்தாள்! இருவரும் குழந்தை கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். தங்கள் வீட்டில் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். உணவு தயாரானது. கண்ணனுக்குப் பரிமாறினார்கள். கண்ணனும் சாப்பிட்டான்! கணவன் கண்ணனிடம், "கண்ணா சாப்பாடு சுவையாக இருக்கிறதா?'' என்று கேட்டான். அதற்குக் கண்ணன், "உன் மனைவி நான் வந்தவுடன் தந்தாளே வாழைப்பழத்தோல்!....அதைவிட இந்த விருந்தில் சுவை குறைவாகத்தான் இருந்தது!' இறைவனுக்கு என்ன தருகிறோம் என்பதை விட எப்படித் தருகிறோம் என்பதே முக்கியம்!