logo
home பலன்கள் ஜூலை 30, 2019
முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி முக்திபேறு கிடைக்க உதவும் ஆடி அமாவாசை
article image

நிறம்

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைபிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. இதில் மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால் பாவங்கள் விலகி, புண்ணியத்தைச் சேர்க்கலாம். ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்திற்கு மாலை போட்டு, அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள் நீங்கும். விரதம் இருப்பது எப்படி?* ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் செய்ய வேண்டும். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, எண்ணெய் பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூபம், தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை இலையில் வைத்து காகத்திற்கு படைக்க வேண்டும். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிடைக்கும். ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்த பிறகு, பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது. நமது முன்னோர் முக்தி பெற நாம் ஆடிமாத அமாவாசையைப் பயன்படுத்தி தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு முக்தி கிடைக்க உதவினால், சந்ததியினரின் பாவங்கள் நீங்குவதுடன் முன்னோர் சாபங்களும் நீங்கி, குடும்பத்தில் நிலவும் சண்டை சச்சரவு, குழப்பங்கள் போன்றவை நீங்கும்.