இப்படி ஓர் இக்கட்டு நேரும் என்று காஞ்சி மடத்தின் அந்தச் சிப்பந்திக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து வேட்டி கேட்டான் என்றதும், வேட்டி கொடுக்கச் சொன்னார் பெரியவர். மடத்திலிருந்து ஒரு புது வேட்டியைக் கொண்டு வந்து வண்டிக்காரனிடம் கொடுத்தார் சிப்பந்தி. அடுத்து 'என் சம்சாரத்திற்கு ஒரு சேலை கொடுங்கள்' என்று வேண்டினான் அவன்! 'நடக்கட்டும், அவனுக்கு ஒரு புடவையைக் கொடு' என்றார் சுவாமி. ஆனால் மடத்தில் அப்போது புடவை எதுவும் இல்லையே கொடுப்பதற்கு. சிப்பந்தி செய்வதறியாது கையைப் பிசைந்தார். வண்டிக்காரன் ஏமாற்றத்தோடு திரும்பி நடந்தான். தொலைவிலிருந்து அனைத்தையும் உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. அவள் பெரியவரின் பரம பக்தை. புதுப்புடவை கட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவளிடம் இருந்த பையில் ஒரு பழைய புடவை இருந்தது. விறுவிறுவென்று சற்று மறைவாகச் சென்றாள். புதுச் சேலையைக் களைந்து பழைய சேலையைக் கட்டிக் கொண்டாள். விரைந்து வந்தாள். ஏமாற்றத்தோடு திரும்பிக் கொண்டிருந்த வண்டிக்காரனை அழைத்து புதுச் சேலையைக் கொடுத்தாள். அவன் மனநிறைவோடு சேலையை வாங்கிக் கொண்டான். இவள் அவனுக்குச் சேலை கொடுத்தாள் என்பது அவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. (என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்!) பழையபடி தான் நின்ற இடத்திலேயே போய் நின்றுகொண்ட அவள், பெரியவரின் திருமுக தரிசனத்தில் மெய் மறந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். யார் யாரோ அவரைத் தரிசிக்க வரிசையில் வந்து கொண்டிருந்தார்கள். சுவாமியின் திருக்கரம் குங்குமப் பிரசாதத்தை வழங்கிக் கொண்டிருந்தது. வந்தவர்களில் ஒரு கல்யாணக் குழுவினரும் இருந்தார்கள். அவர்கள் மடத்திற்கு நன்கொடை தர விரும்பினார்கள். பெரியவர் சிரித்துக் கொண்டே, 'உங்கள் உறவினர்களுக்கெல்லாம் புதுச்சேலை வாங்கியிருப்பீர்களே?' என விசாரித்தார். 'ஆமாம் ஆமாம்!' என்றார்கள் அவர்கள். 'அந்தச் சேலைகளில் ஒன்றை மடத்திற்கு நன்கொடையாகத் தரலாமே?' என்றார் சுவாமி. அவர்களுக்கு அளவற்ற திருப்தி. ஒரு சேலையை மடத்திற்கு எனத் தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். பெரியவர் தொலைவில் நின்ற பெண்மணியை வரச் சொல்லுமாறு பணித்தார். திகைப்போடு அவள் பெரியவர் முன்வந்து நின்றாள். 'என்னம்மா? நான் சொன்னேன் என்றவுடன் வண்டிக்காரனுக்கு நீ கட்டியிருந்த சேலையைக் கழற்றிக் கொடுத்து விட்டாயே? கர்ணனின் வாரிசுபோல் தோன்றுகிறாய் நீ. நல்லது... இந்தா... இந்தப் புதுச்சேலை உனக்குத்தான்!' என ஆசீர்வாதத்தோடு அந்தச் சேலையை அவளுக்கு வழங்கினார். தான் அந்த வண்டிக்காரனுக்குச் சேலை கொடுத்த விவரம் பெரியவருக்கு எப்படித் தெரிந்தது என அவளுக்குப் புரியவேயில்லை. சேலையைப் பெற்றுக்கொண்ட அவள் விழிகளில் கண்ணீர் திரையிட்டது. இதனால்தான் கொடுப்பதை மனதார எந்தவித ஆடம்பரமும் இன்றி கொடுக்க நம் முன்னோர் பணிக்கின்றனர், நாம் எதை மற்றவருக்கு கொடுத்தாலும் இறைவனுக்கு அவசியம் தெரியும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டாலே போதும், வள்ளல் என்று மற்றவர் நம்மை போற்ற விழா நடத்தி தானம் செய்வது பாவத்தைத்தான் தருமே தவிர புண்ணியத்தை ஒருதுளி கூட சேர்க்காது. ஆயிரம் புடவைகளை ஆடம்பர நோக்கத்தில் கொடுப்பதைவிட இந்த பெண்மணியின் தானம் மிகச் சிறப்பு வாய்ந்ததுதான். யாருக்கும் தெரியாமல் கொடுத்த சேலைக்கு, பெரியவா கையாலேயே, புதுச்சேலை மட்டுமின்றி மகா பெரியவரின் ஆசியும், வள்ளல் என்ற மகானின் வார்த்தைம் பெற்ற பெண்ணின் தானத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை.
நிறம்