அம்மாவின் மடியும், ஆண்டவனின் திருவடியும் நிம்மதி தரவில்லை என்று சொன்னால் அப்படி சொல்பவன் இடத்தில் எதோ கோளாறு இருப்பதாக அர்த்தம். இறைவனுக்கு நிகராக தாய்மை இருப்பதனால் தான் அவனை அம்மையே! அப்பனே என்று பணிந்தார்கள். தாயேனும் பரிவுடையவன் என்று போற்றினார்கள். தாயுமானவன் என்று பேர்கொடுத்து வாழ்த்தினார்கள். தாயை பற்றி பேசினால் சுகம், சிந்தித்தால் சுகம், தாயை நேராக கண்டாலோ ஆனந்தத்தின் எல்லையே தெரிந்தது போல் இருக்கிறது. அன்பு என்ற மஹாசமுத்திரம் நம் கண்முன்னால் ஊற்றெடுப்பது போல் இருக்கிறது. அன்னையும் அன்புதான், அன்னையை சார்ந்த அனைத்துமே அன்புதான் இது என் அம்மாவிற்கு பிடித்த சட்டை. என் அம்மா விரும்புகிற பாடல் இது. என் தாயாருக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும் என்று கூறுவதில் மட்டுமல்ல அம்மாவை போல் வடிவுடைய யாராவது ஒரு பெண்ணை பார்த்தாலும், தாயன்போடு ஏதாவது ஒரு மாதரசி நம்மிடம் பேசினாலும் கண்களின் ஓரத்தில் கட்டுப்படுத்த முடியாத ஈரக்கசிவு கண்டிப்பாக வருகிறது. நாம் வாழ்நாளில் சந்திக்கிற எல்லாவிதமான பெண்களும் நமது தாயாரை போல் தெரிவதில்லை. யாராவது ஒரு பெண் அப்படி தெரிவாள் அப்படி பார்த்தால் கையெடுத்து வணங்கத்தோன்றும். அவளது ஆறுதல் மொழிகளை கேட்டால் தாலாட்டு கேட்பது போல் இன்பம் பிறக்கும். இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால், தொலைபேசி வழியாக தினசரி பல மனிதர்கள் என்னோடு பேசுவார்கள். அவர்கள் அனைவருமே சொந்த பிரச்சனைகளை அதிகம் பேசுவார்கள். அதற்காக ஆலோசனை கேட்பார்கள் நான் கூறும் ஆலோசனையும், அறிவுரையும் அவர்களுக்கு பயனுடையதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிறகு மீண்டும் எப்போதாவது ஒரு நேரம் பேசுவார்களே தவிர அப்படி பேசுகின்ற நேரத்தில் தவறி கூட நமது நலத்தை விசாரிக்க மாட்டார்கள். எனக்கு உடல்நலம் சரியில்லை நான் பிறகு பேசுகிறேன் என்று சொன்னாலும் கூட நான் சொல்வதையாவது சிறிது கேளுங்கள் என்று பிடிவாதம் செய்வார்களே தவிர விட்டுவிட மாட்டார்கள். அப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் சில நல்ல இதயங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனது நலத்தில் மிக அக்கறையோடு நடந்து கொள்வார்கள் அவர்களில் ஒருவர் லண்டனில் இருக்கும் திருமதி.குமார் என்ற அம்மையார். அவர் பேசும் போது, என் அம்மா என்னோடு பேசுவது போலிருக்கும் நான் ஒரு சந்நியாசி, வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் கடந்தவன் என்பதை பற்றி சிறிது கூட கவலைப்படாமல் மனதார, வாய்நிறைய என்னை வாழ்த்துவார்கள். அதில் அவர்களது உரிமையும், அக்கறையும் தெளிவாக தெரியும். ஊரை நீங்கள் வாழ்த்தலாம். உங்களை வாழ்த்த எனக்கு உரிமை உண்டு என்பார்கள். அந்த உரிமை எனது தாய்க்கும் உண்டு, இவருக்கும் உண்டு என்று நினைக்கும் போது மெய் சிலிர்க்கும். அப்படிப்பட்ட அந்த அம்மையார் இன்று தொலைபேசியில் ஒரு தகவலை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் சிறுவயதாக இருந்த போது, ஒரு சந்நியாசிக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்கச்சொன்னார்களாம். இவர் மறுத்து விட்டாராம். காரணம் பெண்ணாக இருப்பவள் கணவன் கழுத்தில் மட்டுமே மாலை அணியவேண்டுமே தவிர, மறந்தும் கூட மற்றவர்கள் கழுத்தில் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும், ஆன்மீக ஞானிகளாக இருந்தாலும், மாலை அணியக்கூடாது அது தவறு என்று சொன்னார்களாம். அப்படி சொன்னது ஒருவேளை தான். சந்நியாசிகளை அவமரியாதை செய்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் அந்த மாதரசிக்கு இத்தனை வயது கடந்து இப்போது வந்திருக்கிறது. அதனால் அவர்கள் அதற்கு விளக்கம் கேட்டார்கள். மாலை அணிவித்தல் என்பது இந்திய மரபிலும், தமிழ் மரபிலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். அரசியல் தலைவர்களுக்கு மாறி மாறி மாலைகள் போடுவது போல, அனாவசியமாக எல்லோருக்கும் மாலை போடக்கூடாது. ஆனால் இன்று நமது பண்பாடு சிதைந்து மாலை போட்டுக்கொள்வதற்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, அனைவரும் விருப்பத்தோடு மாலைகளை வாங்கி அணிந்து கொள்கிறார்கள். மலர்மாலை என்பது ஒவ்வொரு மனிதனின் திருமணத்தின் போதும், இறப்பின் போதும் கண்டிப்பாக அணியக் கூடியதாக இருக்கிறது. நாகரீகமே கிடையாது என்று கூறுகிற ஆப்பிரிக்க வனவாசிகளிடமும் இந்த இரண்டு சமயத்தில் மாலை அணியும் பழக்கம் இருக்கிறது. ஐரோப்பிய, நாகரீகவாதிகளுக்கும் கூட இந்த பழக்கம் உண்டு. எனவே மாலை அணிவது என்பது உலகத்தின் பொது பண்பாகும். ஆனால், நமது தேசத்தில் மட்டும் தான் மாலை அணிவதற்கும், தனித்தனி கால கட்டங்களை, தனித்தனி சடங்கு முறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். இதில் பொருள் இல்லாமல் இல்லை. பொதுவாக மலர்மாலைகள் ஆண்டவனுக்கும், அரசனுக்கும் சொந்தமானது. அரசன் என்றால் நாட்டை ஆள்பவன் மட்டும் என்ற பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தலைமை பொறுப்பில் எவன் இருந்தாலும் அவன் அரசனாகவே கருதப்படுவான். ஒரு கூட்டுறவு வங்கியின் தலைவராக இருப்பவன் கூட, அந்த வங்கியை பொறுத்தவரை அரசன். அதனால் அவனுக்கு மாலை மரியாதை செய்யலாம். ஒரு இளைஞன் நேற்றுவரை பிரம்மச்சாரியாக இருந்து, இன்று திருமணம் முடிந்து கிரகஸ்த னாக குடும்பம் நடத்த போகின்ற போது, அவன் குடும்ப தலைவன் என்ற பொறுப்பை ஏற்கிறான். எனவே அங்கு அவன் மாலைக்கு உரியவன் ஆவான். அவனே இறந்து போய்விட்டால், சிவலோக பதவியையோ, வை குந்த பதவியையோ அடைந்த வனாகிறான். அப்போதும் அவனு க்கு மலர்மாலை சொந்த மாகிறது. இந்த இரண்டு நேரங்கள் தவிர வாழ்க்கை என்பதை முற்றிலுமாக துறந்து, இரண்டாவது பிறப்பாளனாக சந்நியாசி என்ப வன் வருகிறான். அவன் ஹிருதயத்தில் இறைவனை சுமப்ப வனால் அவனது திருமேனி ஆலயமாகிறது. எனவே அவன் எந்த நேரமும் மலர்மாலையை பெறக்கூடிய தகுதி பெற்றவனாக இருக்கிறான். அம்மையாரின் கேள்வி பெண்கள் மாலை போடலாமா? கூடாதா? என்பது தானே தவிர யாருக்கு மாலை போட வேண்டும்? யாருக்கு போடக்கூடாது? என்று விளக்கம் கேட்பது அல்ல. பண்பாட்டில் பெண்களுக்கு மிக முக்கியமான இடம் கொடுக்கபட்டிருக்கிறது அதனால் தான் பெண்களை மதிக்காத சமூகம் அழிந்து போய்விடுமென்று நமது சாஸ்திரங்கள் சொல் கின்றன. ஆண்கள் செய்கின்ற பல வேலைகளை பெண்களாலும் செய்யமுடியும் என்றாலும் சில காரணத்திற்காக அவர்களை செய்யக்கூடாது என்று நமது சமூகம் தடுக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆதி காலத்தில் மனிதன், மரங்கள் அடர்ந்த குகையில் வாழுகின்ற போது தனக்குரிய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்ததன் சின்னமாக பரஸ்பரம் மாலைகளை மாற்றி கொண்டனர். அதன் விரிவாக்கம் தான் தாலி அணியும் பழக்கம் என்று கூறலாம். இருந்தாலும், மாப்பிளையும், பெண்ணும் மாலை மாற்றிக்கொள்ளும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. பெண்கள், தான் கட்டுகிற கணவன் ஒருவனுக்கே மாலை அணிவிக்க வேண்டும் என்கிற பழக்கம் தமிழ்நாட்டிற்கு சொந்தமானது அல்ல. ராஜபுத்திரர்களுக்கு சொந்தமானது ஆகும். ராஜபுத்திர பெண்கள், ஒரு வீரனின் வாளுக்கு மாலை அணிவித்து விட்டால் கூட அடுத்தவனை புருஷனாக ஏற்க மாட்டார்கள். அரசர்கள் நடத்தும் சுயவரத்திலும், கணவனாக வருபவனுக்கு மாலை அணிவித்து தேர்ந்தெடுக்கும் பழக்கம் பிற்காலத்தில் வளர்ந்து, பரதகண்டம் முழுவதும் கட்டியவனுக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்ற மரபு ஏற்பட்டு விட்டது. ஆதிகாலம் தொட்டே, கணவனுக்கு தான் பெண் மாலை சூடுவாள். வேறொருவனுக்கு மாலை சூடினால் அவள் கற்பு நிலையிலிருந்து தவறியவளாக கருதப்படுவாள் என்று போதனை நடந்து வருகிறது. அதன் விளை வாக தான் அம்மையாரும் அன்று அப்படி பேசியிருக்கிறார். அதில் அவருடைய தவறு இருப்பதாக அவர் வேண்டுமென்றே பெரிய வர்களை அவமரியாதை செய்திருப்பதாக நாம் கூறமுடியாது. சமூகம் கருதியதை அவர் எதிரொலித்திருக்கிறார். ஆனால், உண்மையில் ஒரு பெண் கணவனுக்கு மட்டும் தான் மாலை அணிய வேண்டுமா? மற்றவர்களுக்கும் அணியலாமா? என்பதை சற்று பரந்துபட்டு சிந்திக்க வேண்டும். நமது தொன்மையான தமிழ் இலக்கியங் களில், போர்க்களங்களுக்கு செல்லும் தனது வீர புதல்வர்களை மலர்மாலை அணிவித்து வழியனுப்பி வைக்கும் தாய்மார்களையும் வெற்றி வீரனாக, வீடு திரும்பும் தமையனுக்கு மாலை அணிவித்து வரவேற்கும் சகோதரிகளையும் காண்கிறோம். இது மட்டுமல்ல வெற்றிபெற்ற அரசனுக்கு, மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கும் பெண்மக்கள் பலரைப்பற்றியும் இலக்கியங்கள் பேசுகின்றன. நமது இதிகாசங் களிலும், புராணங்களிலும் ரிஷிமார்களை வரவேற்க ஆண்-பெண் என்ற பேதம் இல்லாமல் மாலைகளை அணிவித்தார்கள் என்பதை பார்க்கிறோம். ஆக, இவற்றை எல்லாம் பார்க்கும் போது வேற்று ஆடவருக்கும் பெண்கள் மாலை அணிவிக்கலாம். ஆனால் அதில் சில இலக்கண வரைமுறைகள் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இருந்தாலும் கணவனை தவிர, வேறொரு வனுக்கு மாலை அணிவிக்க மாட்டேன் என்ற உறுதியை நாம் வரவேற்பதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சுதந்திரம் உண்டு. தனக்கு விரும்பியதை, தான் சரியென்று நம்புவதை கடைபிடிப்பதில் தவறு அல்ல. ஆனால் அதே நேரம், அந்த காரியத்தை வேறொருவர் செய்தால் அதை குற்றம் கூறுவதும், குறை பேசுவதும் தவறாகும். எனது இந்த பதில் திருமதி.குமார் அம்மையாருக்கு மட்டும் உரியது அல்ல அவரைப்போன்று நிறையப்பேர் உள்ளதனால், அவர்களும் அறிந்து கொள்ள உண்மை நிலையை விளக்கினேன். விளக்க வைத்த அன்னையின் அன்புக்கு நன்றி. யோகி ஸ்ரீ ராமானந்த குரு போன்: 09442426434
நிறம்