
கடலூர் திருநாரையூரில் உள்ள சவுந்தரேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு பொல்லாப் பிள்ளையார் என்று பெயர் இந்தப் பிள்ளையாருக்கு பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. நாம் அன்றாடம் இறைவனைத் துதித்து பாடப்படும் தேவாரம், திருவாசகம், திருமுறைகள் போன்றவை கிடைக்க காரணமாக இருந்தவர் இந்தப் பொல்லாப்பிள்ளையார்தான். விநாயகரின் குண்டான உருவத்தையும் யானை முகத்தையும் பார்த்து சந்திரன் கேலி செய்ததாக வரலாறு உண்டு. அப்படி அவர் கேலி செய்ததால் கோபங் கொண்ட விநாயகர் சந்திரனை ஒளி இழக்கும்படி சாபம் விட்டுவிட்டார். கலங்கிப் போன சந்திரன், தன் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். மனம் இளகிய விநாயகர் பௌர்ணமி முதல் அமாவாசை வரை தேயும்படியும், அம்மாவாசை முதல் பௌர்ணமி வரை வளர்ச்சி பெற்றும் திகழுமாறு அருள்புரிந்தார். இவ்வாறு சந்திரன் விநாயகரை கேலி செய்த நாள் சங்கடஹர சதுர்த்தி நாளாகும். இந்த நாளில் எல்லா பிள்ளையார் கோவிலிலும் பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். ஆனால் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் மட்டும் பூஜை முடிந்ததும் சன்னதிக்கு எதிரே ஒரு விளக்கை ஏற்றிவைப்பார்கள். அங்கிருந்து வானத்திலுள்ள சந்திரனை நோக்கி தீப ஆராதனை செய்வார்கள். இந்த பூஜையில் வாழ்ந்து கெட்டவர்கள், பிறரால் கேலிக்கு ஆளாகுபவர்கள் போன்றோர் கலந்து கொண்டால் அவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். மேலும் தங்களை கேலி செய்தவர்களுக்கு தக்க தண்டனையும் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருப்பதால் இந்த பூஜையின் போது அதிகமானோர் கலந்து கொள்கிறார்கள்.