
மகா பிரளயத்தில் உலகம் அழிய... மீண்டும் உலகைப் படைக்க வேண்டி, உமையவள் சிவனாரை நோக்கி கடுந்தவமிருந்தது மகா சிவராத்திரி திருநாளில்தான்! ஈசன், லிங்கத்தில் பிரசன்னமானது மகாசிவராத்திரி நாளில்! அடி- முடி தேடிய விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் சிவனார் காட்சி தந்த நன்னாளும் மகா சிவராத்திரி தினத்தில்தான்! பாற்கடலில் கடையும்போது வெளியான விஷத்தை சிவபெருமான் சாப்பிட... அதை விழுங்காதபடி தடுத்தார் உமையவள். இதனால், ஈசனுக்கு நஞ்சுண்டன், நீலகண்டன் எனும் திருநாமங்களைப் பெற்றார். அந்த உலகை காக்கும் சம்பவம் நடைபெற்ற நாளும் மகாசிவராத்திரிதான்! அர்ஜுனன் தவம் இருந்து பாசுபதம் எனும் அஸ்திரத்தைப் பெற்றது இதுபோன்ற மகா சிவராத்திரி நாளில்! பகீரதன் ஒற்றைக் காலில் தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாளும் மகாசிவராத்திரி நாளில்தான்! திருக்கடையூர் திருத்தலத்தில்... மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனை சிவனார் சம்ஹரித்த அற்புதமான நாளும் மகா சிவராத்திரி நாளில்தான்! கண்ணப்ப நாயனாரின் கதை அனைவருக்கும் தெரியும், சிவனாருக்காக, தன் கண்ணையே பெயர்த்தெடுத்துத் தந்து சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு அவருக்கு சிவபெருமான் அருளிய தினமும் மகா சிவராத்திரி நாளில்தான்! ஸ்ரீபார்வதிதேவி தவமிருந்து வழிபட்டு சிவனில் பாதியைப் பெற்ற புனித நாளும் மகா சிவராத்திரியில்தான்! இப்படி, புண்ணியம் மிகுந்த நிகழ்ச்சிகள் பல நடந்தது இந்த சிவராத்திரியில்தான் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற பல அற்புதங்கள் நடைபெற்ற தினத்தில் நாமும் சிவவிரதம் மேற்கொண்டு ஈசனின் அருளை பெற ஆன்மீகமலர்.காம் சார்பில் வேண்டிக்கொள்கிறோம்.