logo
home ஆன்மீகம் ஜனவரி 28, 2020
ஆன்மிகம், கலாச்சாரத்தை விரிவாக கூறும் ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி
article image

நிறம்

சென்னையில் வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் 29.01.2020 ஆம் தேதி முதல் 03.02.2020-ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்கு ஹிந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழா 28.01.2020 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சி இந்துசமயம் பற்றியும், இந்து கலாச்சாரம் பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ள பல்வேறு வழிவகைகளை செய்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆன்மிகம் சார்ந்த ஒரே கண்காட்சி என்ற பெருமையைக் கொண்டது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி. கடந்த 2009- ஆம் ஆண்டு சென்னையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, படிப்படியாக வளா்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்தி வருகின்றனா். வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலை பராமரித்தல், ஜீவராசிகளைப் பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை ஊட்டுதல் ஆகிய 6 கருத்துக்களை முன்வைத்து 6 நாள்கள் நடைபெற்று வரும் கண்காட்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனா். அதன்படி 29.01.2020 ஆம் தேதி முதல் 03.02.2020-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த கட்காட்சியை ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி துவக்கி வைக்கவுள்ளார். பண்பு, கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலா் ஆா்.ராஜலட்சுமி கருத்துரை வழங்குகிறார்.
தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளா்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவா். கண்காட்சியின் 6 கருத்துகளில் ஒன்றான ‘பெண்மையைப் போற்றுதல்’ என்ற கருத்தை மையக் கருத்தாக வைத்து நிகழாண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.
பத்தினி தெய்வமான கண்ணகி, கண்காட்சியின் அடையாளச் சின்னமாக முன்னிறுத்தப்படுகிறார். கண்காட்சி அரங்கத்தின் முன்பு கண்ணகிக்கு பிரம்மாண்டமாக சிலை அமைக்கப்படவுள்ளது.
ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுக்கு ஒளவையார் பாடல், பாரதியார் பாடல், போன்ற பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டிகள், கில்லி, கோலி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம், மல்லா் கம்பம், போன்ற சாகச விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டிகள் கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளன.
கிண்டி ரேஸ் கோர்ஸ், ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல், செல்லம்மாள் கல்லூரி, கிண்டி சிப்காட், ஒலிம்பியா பேருந்து நிறுத்தம், அசோக் பில்லா், இன்ஃபோசிஸ், சின்னமலை, சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோயில், தரமணி, விஜயநகரம் சந்திப்பு, தரமணி, பெருங்குடி சந்திப்பு, வேளச்சேரி பேருந்து நிலையம், வேளச்சேரி பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறம், சதா்ன் லாண்ட் எதிர்ப்புறம், மற்றும் வேளச்சேரி மெட்ரோ ரயில் நிலையம், ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்களை கண்காட்சிக்கு அழைத்து வருதல், கண்காட்சியை பார்த்து முடித்த பின் மேற்கண்ட 16 இடங்களுக்கு மீண்டும் கொண்டு சென்று சோ்த்தல் ஆகிய பணிகளில், 35-க்கும் மேற்பட்ட ஷோ் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை ஈடுபடவுள்ளன.
இந்தக் கண்காட்சியில் பெருமளவில் மக்களை வரவழைப்பதற்காகவும், கண்காட்சியின் பின்ணணியில் உள்ள தத்துவங்களைப் பரப்புவதற்காகவும் பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரமாண்ட யோகாசனப் பயிற்சி சென்னையில் நடைபெற்றது. கோவை ஓசோன் யோகா மைய நிறுவனரும் 98 வயதிலும் யோகாசன பயிற்சி அளித்து வந்த நானம்மாள் மகனுமான பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் ஆறு கருத்துகளின் அடிப்படையில் யோகாசனங்கள் நிகழ்த்தப்பட்டன.
வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தை முன்வைத்து சமஸ்திதி ஆசனம் எனப்படும் உடலை ஒரே நிலையில் வைத்திருக்கும் வகையில் 5 ஆசனங்கள் செய்யப்பட்டன.
சென்னையில் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால், இந்து சமயம் பற்றியும் பாரம்பரிய விளையாட்டுக்களையும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். பாரம்பரிய விளையாட்டுக்களைப்பற்றி தெரியாமல் மின்சார சாதனத்துடன் விளையாடும் குழந்தைகளை அவசியம் இந்த கண்காட்சியில் பங்கெடுத்து பாரம்பரிய விளையாட்டை தெரிந்து கொள்ள பெற்றோர் குழந்தைகளுடன் அவசியம் இக்கண்காட்சிக்கு சென்று வாருங்கள்.