logo
home ஆன்மீகம் மார்ச் 14, 2016
பார்வைக் கோளாறு உள்ளவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம்
article image

நிறம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் பார்வையற்ற ஒரு செல்வந்தன் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். கண் பார்வை வேண்டி பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டவண்ணம் இருந்தார். அவர் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகிலுள்ள ஆஸ்ராமம் என்ற சிற்றூர் வழியாக வந்து கொண்டிருந்தார். வழியில் யாரோ அழைப்பது போல இருந்தது. அங்கேயே நின்றுவிட்டார். அவர் நின்ற இடம் சாஸ்தா கோயில். இரவு நேரம் என்பதால் அங்கேயே தூங்கிவிட்டார். நடு இரவில் யாரோ அவர் கண்களில் யாரோ ஒருவர் மைதீட்டுவது போல உணர்ந்தார். தூக்கத்தில் இருந்து விழித்தார். அவருக்கு பார்வை கிடைத்திருந்தது. அங்கிருந்த சாஸ்தா கோயிலைக் கண்டார். மையிட்டு கண்ணுக்கு ஒளி தந்த சாஸ்தாவுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்தார். அன்று முதல் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’’ என்ற சிறப்புத்திரு நாமம் சாஸ்தாவுக்கு ஏற்பட்டது. சுருள் சுருளாக தலைமுடியுடன் நடு உச்சியில் சிகைமுடிந்திருக்கும் இவர் கையில் கதாயுதம் தாங்கியடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். பார்வை கோளாறு உடையவர்கள் சிகிச்சை பெறும் முன், இவரைத் தரிசித்தால் நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதே போன்று, விழுப்புரத்தில் இருந்து10 கி.மீ., தூரத்திலுள்ள பனையபுரம். “புறவார் பனங்காட்டூர்’’ என்று இவ்வூர் தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள சிவன் பனங்காட்டீஸ்வரர் எனப்படுகிறார். நேத்ர உத்தாரணேஸ்வரர், திருக்கண்ணமர்ந்த நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். கண்ணிற்கு புத்துயிர் அளிப்பவர் என்பது இதன் பொருள். ஒரு வேடனால் விரட்டப்பட்ட புறாவிற்கு தன் சதையையே அறுத்துத் தந்த சிபிச்சக்கரவர்த்தியின் கருணையை வியந்த இவ்வூர் ஈசன், அவனுக்கு பிறப்பற்ற நிலை தந்ததாக தல வரலாறு கூறுகிறது. புறாவிற்கு வாழ்வளித்த தலம் என்பதைக் குறிக்கவே, இவ்வூர் ‘புறவார் பனங்காட்டூர்’ என்று பெயர் பெற்றதாக கூறுவர். நவக்கிரக நாயகனான சூரியனும் பனங்காட்டீசரை வழிபாடு செய்ததால், சூரியதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. பார்வைக்கோளாறு உள்ளவர்கள் கண்ணில் அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கு முன், இங்கு வந்து இறைவனைவழிபடுகின்றனர். இத்தல அம்பிகைக்கு சத்யாம்பிகை என்பது திருநாமம். இந்த அம்பிகையை வழிபட்டால் உண்மை பேசும் தன்மையும், வாக்கு வன்மையும் வளரும். பொய் சாட்சியால் பாதிக்கப்பட்டவர்கள், இவளிடம் வேண்டிக் கொண்டால் எதிரிகள் தண்டனை பெறுவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.