
இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. அம்பாளை கரையில் வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை,கால் கழுவினர். திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர். இதன்பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர். சிலைக்கு பூஜை செய்து விளையாடினர். இந்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்றபோது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார். மக்கள் பூ கட்டி பார்த்தனர். அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது. எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது. யானையும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது. அந்த இடத்தல் சிலையை வைத்து பூஜை செய்தனர். இவளே ஆதிமாரியம்மன் எனப்பட்டாள். சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாக கருதப்படுகிறாள். இப்போதும் சமயபுரத்திலிருந்து திருவிழா காலத்தில் இங்கு மாரியம்மன் தன் தாயைக் காண வருவதாக ஐதீகம். இதற்காக பல்லக்கில் அம்பாள் கொண்டுவரப்படுகிறாள். பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் தன் தாயைக் காண வருகிறாள். அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர். தாய்வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர். இவ்வூரிலிருந்து திருமணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய்வீட்டிலிருந்து துணிமணிகள் எடுத்து அனுப்பப்படுகின்றன. வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மணியார்டர் செய்துவிடுகின்றனர். சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர். இந்த சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சமயபுரத்து அம்னைப்பார்த்த நிலையில் தாய் இருப்பதால் இவ்வாறு திசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக அம்மன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைக்கப்படுவதே வாடிக்கை. மாரியம்மன் பிறந்த இடமாகவும் இது கருதப்படுகிறது. விழாக்காலத்தில் சமயபுரத்தம்மன் இங்கு வரும் போது மகிழ்ச்சிகயாக இருப்பது போலவும், திரும்பிச்செல்லும் போது சோகமாக இருப்பது போலவும் சிலையின் வடிவமைப்பு மாறிவிடுவதாக கிராமமக்கள் கூறுகிறார்கள். தாயைப்பிரிந்து செல்லவதால் மகளுக்கு இவ்வாறு முகத்தில் சோகம் கவ்விக் கொள்வதாக நம்பிக்கை. இத்தலத்தில் வேண்டிகொண்டால் சர்ஜரி இல்லாமல் பல நோய்கள் குணமாகும் அதிசயம் நடைபெற்று வருகிறது.