logo
home ஆன்மீகம் ஏப்ரல் 16, 2016
அனுமன் சிரஞ்சிவியாக பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணம்
article image

நிறம்

அனுமான் குழந்தையாய் இருந்து போது ‘அனுமானே! நீ பிறந்த பயனை அடைய வேண்டுமானால் திருமாலுக்கு தொண்டு செய்…’ என்றார் அனுமானின் தந்தையான வாயு பகவான். குழந்தைக்கோ திருமாலைப் பற்றி எதுவும் தெரியாது. ‘திருமால் என்றால் யார் என்றே எனக்குத் தெரியாதே அவரை நான் எப்படி அடையாளம் காண்பது? என்றார் அப்பாவித்தனமாக அனுமான் “யாரைப் பார்த்ததும் உனக்கு காரணமில்லாமல் அன்பு தோன்றுகிறதோ” அவரே திருமால் அவருக்கு நீ சேவை செய்’ என்றார் வாயு பகவான். இராமபிரானை அவர் முதன் முதலாக காட்டில் பார்த்தபோது அவர் மீது அன்பு பிறந்தது அனுமானுக்கு . அந்த அன்பு இராமனின் வாழ்க்கை முடிந்த பிறகும் நீடித்தது. இராமன் மனிதனாக பூமியில் பிறந்ததால் அவருக்கும் இறப்பு கட்டாயம் ஏற்பட்டது. அவர் பூமியில் வாழ்ந்த பிறகு சரயூ நதியில் மூழ்கி உயிர் துறக்க முடிவு செய்தார். இராமபிரானே பூமியில் இல்லையென்றால் நாங்கள் வாழ்ந்து என்ன பயன் என அயோத்தி வாசிகளெல்லாம் அவர் பின்னால் சென்றனர். ஆஞ்சநேயர் மட்டும் ஓரமாக கைகட்டி நின்றார். ஆஞ்சநேயரிடம் அனுமா நான் வைகுண்டம் செல்கிறேன் திருமாலான எனது இந்த அவதாரக் கடமை முடிந்து விட்டது. நீயும் என்னுடன் வைகுண்டம் வா… என்று இராமன் அனுமானிடம் கேட்டார். அனுமான் இராமனை பார்த்து இராமா! வைகுண்டத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்று கேட்டார். அதென்ன அப்படி கேட்டு விட்டாய். அங்கு வந்தவருக்கு நோயில்லை பசியில்லை மரணமில்லை பிறவியுமில்லை. எப்போதும் பரமானந்த நிலை தான். இதை விட வேறென்ன வேண்டும். இந்த ஆனந்தமெல்லாம் இராமா என்ற ஒரு சொல்லுக்கு ஈடாகுமா? அங்கே இராமநாமம் இருக்கிறதா? அது இருந்தால் வருகிறேன் என்றார் அனுமன். இராமன் நெகிழ்ச்சியுடன் அங்கே “இராம நாமம் இல்லை” அது பூலோகத்தில் தான் நிலைத்திருக்கும். உன் விருப்பம் அதுவானால் இராமாயணமும் என் பெயரும் உள்ளவரை நீ இங்கேயே இராமநாமம் ஓதியபடி சிரஞ்சீவியாக (என்றும் மரணமில்லாதவன்) இரு…’ என்றார். அதனால் தான் இன்றும் ஆஞ்சநேயர் இப்பூமியிலேயே இன்றும் இருப்பதாக நம்புகின்றனர் பக்தர்கள். எங்கெல்லாம் இராம நாமம் கேட்கிறதோ அங்கெல்லாம் அவர் இருப்பார்.