logo
home ஆன்மீகம் செப்டம்பர் 17, 2017
பித்ரு பூஜையில் பெருமாள் கலந்துகொள்ளும் அதிசயக் கோயில்
article image

நிறம்

இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களில் முன்னோருக்குரிய பூஜைகள் செய்யப்பட்டாலும் ஒரு சில கோயில்கள் பித்ரு பூஜைக்கென்று தனிச்சிறப்பு பெற்றவையாகவும் விளங்குகின்றன. ஆனால் பித்ரு பூஜை மட்டுமே நடைபெறும் வகையில் எந்த ஒரு தனிப்பட்ட கோவில்களும் இந்தியாவில் கிடையாது என்று நாம் நினைப்பது தவறு. செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங் காலமாக பெரியோர்களால் வணங்கப்படுகிறது. மேலும் இச் சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி “ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர்” என்னும் திருநாமமும், இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு மத்தியம் 12 மணி முதல் 1.00 மணிவரை சிரார்த்த பூஜை நடைபெறுகிறது. மற்ற நேரங்களில் எந்தவித பூஜையும் கிடையாது. இத்தலத்து பெருமாள் சிரார்த்த பெருமாள் என்று அழைக்கின்றனர். தல வரலாறு: இத் திருக்கோயில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்த ஸ்ரீ யாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத் தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சி யம் சொன்னார். அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் (12 மணி முதல் 1 மணி வரை) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார். பெருமாளுடன் ஸ்ராத்தம் இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும். இத்தலத்தில் சிரார்த்தம் செய்பவர்களுடன் பெருமாளும் சேர்ந்து சிரார்த்தம் செய்வதாக ஐதீகம். பிரசாதம்: சிரார்த்தம் முடிந்ததும் ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயண ஸ்வாமிக்கு வெண் பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாக படைக்கப்படுகிறது. இத்தலத்தில் சிரார்த்தம் செய்த அன்பர்களுக்கு அந்த பிரசாதத்தையே மதிய உணவாகவும் வழங்கப்படுகிறது. வெண் பொங்கள், தயிர் சாதம், பிரண்டை எள்ளு சேர்த்த துவையலை மட்டுமே ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார் ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர். பலன்கள்: தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று சிரார்த்த பூஜையில் கலந்து கொள்ளலாம். ராமேஸ்வரம், காசி, கயா போன்ற தலங்களில் ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும். அனாதைகளுக்கும் சிரார்த்தம்: அனாதையாக மரணமடையும் அனைவருக்கும் இத்தலத்து பெருமாளே சிரார்த்தம் செய்வதாகவும் கூறப்படுகிறது. முன்பதிவு: இத்தலத்தில் சிரார்த்த பூஜை செய்வதற்கு முன்பதிவு செய்துவிட்டுச் செல்ல வேண்டும். சிரார்த்தம் முடிந்ததும் வழங்கப்படும் பிரசாதத்தை முன்கூட்டியே தயாரிக்க ஏதுவாக அன்பர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இத்தல முகவரி: Sri Sampath Bhattacharyar, Brahmana street, Nenmeli and post, Via Nandham, Chengalpat - 603002. Kanchipuram District. Ph : 044-27420053.