logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 18, 2022
கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி:  இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
article image

நிறம்

இந்து சமயத்தில் ஒரு சில விஷேசங்கள் இரண்டு நாட்கள் வருவது வழக்கம், அதிலும் ஒருசில திதிகள் இரண்டு நாட்கள் வருவதும் வழக்கம், அந்த வகையில், அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகள் இரண்டு நாட்கள் வருவதை பார்த்திருப்போம். 

ஒருநாளில் முற்பகல், பிற்பகல் என்ற இரண்டு வேளைகள் இருப்பதால், முற்பகலில் வரும் திதி ஒரே நாளிலும், பிற்பகலில் வரும் திதி இரண்டு நாட்களின் பாதி நாட்களையும் பிரித்து எடுத்துக் கொள்வதால் மேற்கண்ட திதி இரண்டு நாட்களுக்கு தங்குவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் திதிகள் அடுத்த அடுத்த நாட்களில் வருவதால் இதைப்பற்றி பெரிதாக விளக்கம் தேவைப்படுவதில்லை, ஆனால் கிருஷ்ணருக்கு கொண்டாடப்படும் பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தியை இரண்டு விதமாக கொண்டாடுவது ஏன் என்ற கேள்வி பல்வேறு காலகட்டங்களில் எழக்கூடியதாக உள்ளது.

கிருஷ்ணஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று இரண்டு விதமாக கிருஷ்ணரின் பிறப்பை ஏன் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ண பக்தர்கள் மனதில் எழும் கேள்விக்கான விடையைப் பற்றி பார்ப்போம்....

கோகுலாஷ்டமி

ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. 

சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவதாக கூறப்படுகிறது. 

கிருஷ்ணஜெயந்தி

இதைப்போன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். 

பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.

இது திதியை அடிப்படையாக கொண்டு சைவ, வைணவ, பக்தர்கள் பிரித்து கொண்டாடுவதாக கூறப்பட்டாலும், புராணக் கதையின்படி இன்னொரு தகவலும் கூறப்படுகிறது.

கோகுலாஷ்டமி

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா நகரத்தில், மதுராவை ஆண்ட கம்சனின் அரண்மனையின் சிறைச்சாலையில், வசுதேவர் – தேவகி தம்பதியர்க்கு, ஆவணி மாதம், தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்தில் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்ததாக பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறைச்சாலையில் பிறந்த தினத்தை கோகுலாஷ்டமி என்று கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. 

சிறைச்சாலை என்ற கொடிய இடத்தில் கிருஷ்ணர் பிறந்தாலும், அவரின் பிறப்பு இறை பிறப்பு என்ற கண்ணோட்டத்தில் உலகில் உள்ள அனைத்து கோவில்களிலும் கோகுலாஷ்டமி தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி

இதே சமயம் கம்சனிடமிருந்து கிருஷ்ணரை காப்பதற்காக, கிருஷ்ணர் பிறந்த இரவில், வசுதேவர் யமுனைக்கு அப்பால் உள்ள பிருந்தாவனத்தில் வாழ்ந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் - யசோதை தம்பதியரிடம் கிருஷ்ணரை ஒப்படைத்தார்.

கிருஷ்ணர் பிறந்தது கொடிய சிறையென்றாலும், பிறந்த அடுத்த கணம் சிறையிலிருந்து விடுபட்டு, பிருந்தாவனத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

பிருந்தாவன மக்கள் கிருஷ்ணரை பிருந்தாவனத்தை ஆள பிறந்த அரசனாகவே பாவித்து பிருந்தாவனத்தில் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடிய தினமே கிருஷ்ணஜெயந்தி என்றும் கூறப்படுகிறது.

இந்த கிருஷ்ண ஜெயந்தி விழா உலகில் வாழும் அனைத்து பக்தர்களின் வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் விழாவாக திகழ்கிறது, சிறையில் பிறந்த தினத்தை கொண்டாடுவதைக் காட்டிலும், ராஜவாழ்க்கையின் துவக்கத்தில் கொண்டாடும் விழாவில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் இல்லங்களிலும் கொண்டாடி, கிருஷ்ணன் தங்கள் இல்லங்களையும், பிருந்தாவனத்தைப் போன்று வசதி வாய்ப்புடன் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சிறை என்றால் சோகமும், இராஜ வாழ்க்கை என்றால் மகிழ்ச்சியும் என்ற பொருளில், சிறை பிறப்பை கோவில்களிலும், பிருந்தாவன வருகையை வீடுகளிலும் கொண்டாடுவதே கோகுலாஷ்டமி  மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு உள்ள வேறுபாடாகும்.