தமிழகத்தை எடுத்துக்கொண்டால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரம் கோவிலில் கிடைத்த பிள்ளையார் சிற்பமானது பொ.யு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது நரசிம்மவர்மனின் படைத் தளபதி வாதாபியிலிருந்துதான் பிள்ளையாரை கொண்டுவந்தார் என்று கூறும் காலத்திற்கு 200 முதல் 300 ஆண்டுகளுக்கு முன்னதான எடுப்பித்த விநாயகர் சிற்பமாகும். தமிழகத்தில் இப்படி முழுமையாக கிடைத்த இறை உருவங்களில் ஆலகிராமத்து எமதண்டீஸ்வரம் கோவிலில் கிடைத்த பிள்ளையாரே மிக மூத்தவராவார். இதற்கு அடுத்தபடியாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் என்று வரிசையாக அதிகமான விநாயகர் சிற்பங்கள் மூவேந்தர்களின் ஆட்சி காலங்களிலும் தமிழகத்தில் கிடைக்கின்றன.!
மேலும் ஆந்திர மாநிலம் கர்னூலுக்கு அருகாமையிலுள்ள வீரபுரத்தில் நடந்த அகழாய்வின்போது ஏழு cm உயரமுடைய ஒரு விநாயகர் சுடுமண் படிமம் கிடைத்ததை அமெரிக்காவில் 1922 ஆம் ஆண்டு வெளியான விநாயகர் தொடர்பான கட்டுரைகளில் இந்திய தொல்லியல் அறிஞர் எம்.கே.தவலீகரின் கட்டுரையிலிருந்து பெறப்பட்ட இந்த செய்தியைத் தந்தவர் கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவனாவார்.
சாதவாகன மன்னர்களின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்த இந்த சுடுமண் சிற்பமானது பொ.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படும் இச்சிற்பத்தைப் பற்றிய கட்டுரையை இரா. கலைக்கோவன் தமிழாக்கம் செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
"சிதைந்த நிலையில் கிடைத்துள்ள இச்சுடுமண் படிமத்தின் கால்கள் உடைந்திருந்தபோதும், இது நிற்கும் நிலையில் அமைந்த படிமம் என்பதும் யானைத்தலை கொண்டுள்ளது என்பதும் அறியுமாறு உள்ளன. இதன் இருகைகளும் உடைந்திருப்பதுடன் தலையலங்காரமும் சிதைந்துள்ளது. இடக்கைக் கிண்ணத்திருந்த மோதகம் சுவைக்கும் நோக்குடன் இதன் துளைக்கை இடம்புரியாத மேல்நோக்கி வளைந்துள்ளதாகக் கொள்ளலாம். பாம்பை முப்புரி நூலாக அணிந்திருக்கும் இதன் இடுப்பாடை, முழங்கால்கள் வரை நீளும் சிற்றாடையாக இருந்திருக்கலாம். பிதுக்கமான விழிகளும் பருத்த உடலும் இப்படிமத்திற்குச் சற்று அருவருப்பான தோற்றம் தருகின்றன. பானை வயிற்றுடன் இயக்கனைப் போல் காட்சி தரும் இச்சுடுமண் உருவச்சிலை ஐயம் திரிபற கணேசருடையதே"
தமிழகத்தில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் கிடைத்த காலத்திற்கு முன்னதாகவே தமிழகத்திற்கு அருகாமையிலுள்ள ஆந்திர மாநிலத்தில் பொ.மு முதல் நூற்றாண்டிலும் விநாயகர் சிற்பம் கிடைத்துள்ள செய்தியானது தமிழர்களிடையே இருந்த விநாயகர் வழிபாட்டின் தொன்மையை சில நூற்றாண்டுகள் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றன. மேலும் பொ.யு முதல் நூற்றாண்டில் கிடைத்த சில நாணயங்களிலும் பிராமி எழுத்துகளுடன் கூடிய விநாயகர் உருவம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இன்றுவரை நமக்கு கிடைத்த விநாயகர் சிற்பங்களில் இந்திய அளவில் மிகவும் பழமையானது வீரபுரத்தில் கிடைத்த சுடுமண் படிமமே ஆகும். இது இன்றிலிருந்து 2100 ஆண்டுகளுக்கு முன்பானது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவிலில் கிடைத்த விநாயகர் மற்றும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிற்பங்களே காலத்தால் மிக முன்னதாகும்.!