மகாலட்சுமி விரதம் மேற்கொண்டால் கிடைக்கும் பலன்கள்
சகல செளபாக்கியத்தையும் தரும் வரலட்சுமி பூஜை செய்ய ஏற்ற நாள் ஆவணி மாத பெளர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை. ஏனெனில் அன்றுதான் மகாலட்சுமி அவதரித்த நன்னாளாகவும் கூறப்படுகிது. புராண கதைகளின்படி தேவர் உலகின் சித்ர நேமி என்ற கணதேதை, கரசந்திரிகா போன்ற பல பெண்கள் கடைபிடித்த வரலட்சுமி விரத்தை நாம் கடைபிடித்தாள் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
பெண்கள் தங்கள் கணவன் ஆயுள் நீடிக்கவும், குடும்பத்தின் செல்வ செழிப்பு உயரவும், சுபிட்சம் பெருகவும் வேண்டி மகாலட்சுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்வதே வரலட்சுமி விரதத்தின் முக்கிய நோக்கமாகும்.
பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய மகா லட்சுமி தேவியை நினைத்தும், மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக்கூடிய இந்த விரதத்தை கன்னிப் பெண்களும், திருமணமான சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த 2024 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அதாவது, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி ஆகும். இந்நாளில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி மற்றும் துவாதசி சேர்ந்து வரும் நாளாகும். அதுமட்டுமின்றி, இந்நாளில் தான் பூராடம் நட்சத்திரமும், மூல நட்சத்திரமும் இணைந்து வருகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த வரலட்சுமி விரதம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறுவதற்குரிய ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும்.
கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.
இந்தவிரதம் அனுஷ்டிக்க வேண்டியதன் அவசியத்தை புராணங்கள் வாயிலாகவும் அறியலாம்.
பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தைக் கடைப் பிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள்.
வந்திருப்பது இலட்சுமி தேவி என்பது அவளுக்குத் தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாகக் கருதி, அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா.
இலட்சுமிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாமானிய காரியம் அல்ல. அரண்மனையைத் தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டுஅகன்றாள் இலட்சுமி தேவி. விளைவு..?
மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா. அந்த இடத்தைக் காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள்.
வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன்
அதைக் கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவியத் தொடங்கியது.
பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்புப் பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள்.
அவள் அனுப்பி வைத்தாலும், அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களைச் சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பைத் தடுத்துவிட்டது.
அவர்களிடம் வந்ததுமே, ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது. இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா.
வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள்.
வரலட்சுமி விரதத்தின் மகிமைகளைத் தாய்க்கு எடுத்துச் சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தைப் போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா.
வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி, ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.