logo
home ஆன்மீகம் ஜனவரி 23, 2016
அறிய வேண்டிய அதிசயம்மிக்க தலவிருட்சங்கள்
article image

நிறம்

சென்னை-திருவொற்றியூரில் ஈசன் அத்திமரக்காட்டில் முனிவர்களுக்கு நடனக்கோலத்தைக் காட்டியதால் அத்தி மரமும் பின்னாளில் மகிழ மரத்தடியில் சுந்தரரின் கோரிக்கையை ஏற்று எழுந்தருளியதால் மகிழ மரமும் தலவிருட்சங்களாகத் திகழ்கின்றன. இரண்டு தல விருட்சங்கள் கொண்ட ஆலயமாகும். திருக்கடவூரில் மார்க்கண்டேயர் காசியிலிருந்து எடுத்து வந்த பிஞ்சாலம் எனும் மல்லிகை வகைக் கொடியே தலமரம். திருப்புனவாசலில் சதுரக்கள்ளி, குருந்து, மகிழம், புன்னை ஆகிய நான்கும் தலமரங்கள். ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் மருதமரம், மலைமல்லி, கொடிமல்லி, செடிமல்லி, அடுக்குமல்லி, மரமல்லி போன்ற ஆறும் தலமரங்களாகப் போற்றப்படுகின்றன. திருநீலக்குடி மனோக்ஞயநாத சுவாமி ஆலயம் வன்னி, பலா, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய ஆறு தலமரங்கள் கொண்ட பெருமை பெற்றது. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தின் தலவிருட்சம், மருதமரம். கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்தில் பாதிரி மரமே தலவிருட்சமாக உள்ளது. வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேட்டில் திருகுக்கள்ளி, கொடிக்கள்ளி மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் முருக்கமரமே தலவிருட்சமாய் உள்ளது. கூர்மாவதாரம் எடுத்த திருமாலுக்கு இம்மரத்தின் கீழ் ஈசன் சுய உருவைக் காட்டியதாக ஐதீகம். சென்னை-சைதாப்பேட்டை சௌந்தரீஸ்வரர் ஆலயத்தில் வன்னிமரம் தல விருட்சமாகத் திகழ்கிறது. சனி தோஷம் உள்ளவர்கள் இந்த மரத்தை வலம் வந்து தம் தோஷம் நீங்கப்பெறுகின்றனர். திருச்செங்காட்டங்குடி உத்ராபதீசுவரர் ஆலயத்தில் ஆத்திமரம் தலவிருட்சமாய் அருள்கிறது. பிள்ளைக்கறியமுது படைத்த சிறுத் தொண்டர் வாழ்ந்த தலம் இது. சென்னை - கோடம்பாக்கம் புலியூர் பாரத்வாஜேஸ்வரர் ஆலயத்தில் நாகலிங்க மரமே தலவிருட்சமாகத் திகழ்கிறது. பூவே சிவலிங்க வடிவில் காட்சியளிப்பது இம்மலரின் விசேஷம். நயினார்கோயில் நாகநாதர் ஆலயத்தில் மருதமரம் தலவிருட்சம். இதில் அநேக பாம்புகள் வசிக்கின்றன. திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் ஆலயத்தில் குருந்த மரமே தலவிருட்சம். இதனடியிலேயே மாணிக்கவாசகர் ஈசனிடம் உபதேசம் பெற்றார். திருவோத்தூரில் உள்ள வேதபுரீசுவரர் ஆலயத்தில் ஆண் பனைமரமே தலமரமாக உள்ளது. திருஞானசம்பந்தர் இந்த மரத்தை பூத் துக் காய்த்து பழம் பழுக்க வைத்தது வரலாறு. சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கொன்றை மரம், தலவிருட்சம். இந்த இடம் கொன்றையடி என வழங்கப்படுகிறது. இம்மரத் திற்கு பூஜை செய்த பின்பே தாணுமாலயனுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. திருவாவடுதுறையில் படர் அரசு தலவிருட்சமாக உள்ளது.அதன் கீழமர்ந்தே திருமூலர் திருமந்திரத்தை அருளினார் என்பர். இம்மரத் தின் பெயராலேயே ஆதீனமும் அரசவனத்து அறநிலையம் என வழங்கப்படுகிறது. திருமருகலுக்கு அருகிலுள்ள திருப்பயிற்றுநாதர் ஆலய தட்சிணாமூர்த்தி சந்நதியில் தலமரமாக சிலந்தி மரம் உள்ளது. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிலந்திப்பூச்சியைப்போல் இருக்கும். சித்திரை, வைகாசியில் பூக்கும் இவை, மணமற்றவை. அப்பர் சுவாமிகள் அவதரித்த திருவாய்மூரில் அவர் நினைவிடத்தில் உள்ள ஆலமரம் களர் அகாய் என அழைக்கப்படுகிறது. இதன் இலைகள் பலவிதமான சுவைகளோடு உள்ளது. மும்மூர்த்தித் தலம் என கொண்டாடப்படும் பாண்டிக்கொடுமுடியில் வன்னிமரம் தலவிருட்சம். இதன் அடியில் வீற்றருளும் நான்முகன் மூன்று முகங்களோடு அருள்கிறார். அவரது நான்காவது முகமாக வன்னிமரத்தை வழிபடுகின்றனர்.