logo
home ஆன்மீகம் ஏப்ரல் 19, 2022
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நிறைவு 
article image

நிறம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. 

இக்கோயிலில் கடந்த 7 ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கியது திருவிழாவின்போது தினமும் இரவு மண்டகப்படிகளில் ஆனந்தவல்லி அம்மனும் பிரியாவிடை சமேதமாய் ஸ்ரீசோமநாதர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 15 ஆம் தேதி எஸ்.பி. பொன்னம்பலம்பிள்ளை குமாரர்கள் குடும்பத்தினர் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனுக்கும் சோமநாதர் சுவாமிக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசிக்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 

அதைத்தொடர்ந்து 16 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற்று கடந்த சனிக்கிழமை இரவு ஆயிர வைசிய காசுக்காரச் செட்டியார்கள் மண்டகப்படியில்  அம்மனும் சுவாமியும் இரு ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வீதி உலா வந்தனர். 

திருவிழாவில் நிறைவாக கோயிலில் கொடிமரத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டு தீர்த்தோற்சவ வைபவம் நடந்தது. 

இரவு கோயில் உள்பிரகாரத்தில் அம்மன் சுவாமி பக்தி உலா வருதல் நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் சுவாமிக்கான பூஜைகளை சோமாஸ்கந்தன் பட்டர், ராஜேஷ் பட்டர், சக்கரைப் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர், மற்றும் மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


முதன்மை செய்தியாளர்
அழகுராஜா